சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 2024-25ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) திகழ்கிறது. இந்த ஆலையில் வந்தே பாரத் பெட்டிகள், எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில், மெமு ரயில் பெட்டிகள் உள்பட பல்வேறு வகைகளில் 70,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், எல்எச்பி ரயில் பெட்டிகள், ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த நிதியாண்டில் (2023-24ம் நிதியாண்டு) 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.