பொள்ளாச்சி: சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாற்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். பொள்ளாச்சி அருகே ஆழியார் அணைக்கு தற்போது கோடை விடுமுறையையொட்டி வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இதில், பல சுற்றுலா பணிகள், ஆழியாற்று தடுப்பணை பகுதியில் தடையை மீறி குளித்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் பிசியோதரபி கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 28 பேர், சந்தோஷ் என்பவர் தலைமையில், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்தனர். அவர்கள் வடகோவையில் உள்ள ஒரு விடுதிக்கு சென்று தங்கினர்.
பின்னர், நேற்று காலை பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு இரண்டு வேன்களில் சுற்றுலா வந்தனர். அதில், சில மாணவர்கள், ஆழியார் அணையை ஒட்டி உள்ள பாலத்தின் கீழ் செல்லும் ஆற்று பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது சென்னை திருவெற்றியூரை சேர்ந்த சோசப்ஆண்டன்ஜெனிப் (21), தென்காசியை சேர்ந்த ரேவந்த் (21), சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த தருண் விஸ்வஸ்தரங்கன் (20) ஆகியோர் திடீர் என ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர். சக மாணவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறிது நேரத்தில் மூவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து ஆழியார் போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் மூவரின் சடலங்களையும் மீட்டனர். இச்சம்பவம் ஆழியார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாற்றில் மூழ்கி பலி: பொள்ளாச்சி அருகே சோகம் appeared first on Dinakaran.