சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 3-வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்திய கிராண்ட் மாஸ்டரான கார்த்திக்கேயன் முரளியுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 30-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான வி.பிரணவ், நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 71-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விதித் குஜராத்தி, நிஹால் சரின் மோதினார்கள். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய விதித் குஜராத்தி 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.