தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘‘சூரிய மகள்” என்ற பெயரில் சாதனை பெண்கள் 35 பேருக்கு விருது வழங்கும் விழா பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் பிரபு, சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 35 பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்,
நடிகர் பிரபு பேசுகையில், ‘‘தாய் இல்லாமல் நான் இல்லை என்று எத்தனையோ பாடல்கள், கவிதைகள் எழுதி உள்ளார்கள். தமிழ்நாட்டில் சாதனை படைத்த பெண்களை அழைத்து விருது வழங்குவதற்கு மிக்க மகிழ்ச்சி.
இதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி. அன்பான அந்த வீட்டுக்கு பெரிய பலமே அண்ணிதான். அடக்கம், அமைதி எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவரை அழைத்து விருது அளிப்பது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் எல்லா பெண்களுக்கும் உந்துதலாக இருக்கும். பெரியவர்கள் முகத்தில் எல்லாம் எங்கள் அம்மாவை நான் பார்க்கிறேன். அண்ணி எப்படி அந்த வீட்டுக்கு தூணாக இருக்கிறார்களோ, அதுபோல் என் அம்மா, என் மனைவி எனக்கு பலமாக இருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் நம் நாட்டின் பொக்கிஷங்கள்” என்றார். நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புலுள்ள களப்போராளி என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எழும்புகளால் ஆனதல்ல.
ஏனென்றால் மிசா சட்டத்தில் சிறையில் பூட்ஸ் காலில் மிதிபட்டு பலமில்லாமல் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியாலானது. அண்ணியார் முன்னிலையில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், துறைமுகம் தொகுதி பொறுப்பாளர் நரேந்திரன், துறைமுகம் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் பரிமளம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு துறையில் சாதனை படைத்த 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது: துர்கா ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.