சென்னையின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றாக கோடம்பாக்கம் மேம்பாலம் இருக்கிறது. பூந்தமல்லி மற்றும் அண்ணா சாலை நோக்கி இருபுறங்களிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த பாலத்தின் வழியாக செல்கின்றனர். ஆற்காடு சாலைக்கும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்கும் இடையில் அமைந்துள்ள இந்த பாலம் 1965-ம் ஆண்டில் 32 அடி அகலத்தில் 623 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணி 1963-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி, 1965-ம் ஆண்டில் முடிந்து திறக்கப்பட்டது. தற்போது, இது சென்னை மாநகரின் பழமையான மேம்பாலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த பாலத்தை மேம்படுத்தம் விதமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் செல்ல தடைவிதித்து, பாலத்தின் தூண்களை வலுப்படுத்தி உயர்த்தும் நடவடிக்கையும், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இந்த பணி முடிந்தபிறகு, கடந்த 2014-ல் பாலம் திறக்கப்பட்டது. இதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.