சென்னை: புதுடெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில், நாடு முழுவதும் மல்டிமாடல் லாஜிஸ்டிக் பூங்கா (எம்எம்எல்பி) எனும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்களை மேம்படுத்துவதற்கு, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கண்டறிப்பட்ட இடங்கள், இத்திட்டத்துக்கு ஒதுக்கிய, வழங்கப்பட்ட நிதி, இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்க்கும் தாக்கம், அதன் செயல்திறனைக் கண்காணித்து மதிப்பிடும் வழிமுறைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், நாடு முழுவம் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மல்டிமாடல் லாஜிஸ்டிக் பூங்காக்களை அமைக்க 35 இடங்களை கண்டறிந்துள்ளோம். இதில் சென்னை மற்றும் கோவையில் லாஜிஸ்டிக் பூங்காக்கள் மேம்படுத்தப்படுகின்றன. இப்பூங்காக்கள் மற்றும் ஒருங்கிணைந்த மல்டிமாடல் கிளஸ்டர்களின் மேம்பாடு போன்றவை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மற்றும் கோவையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், சென்னை துறைமுக ஆணையம் ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.641.92 கோடி மதிப்பில் அமைகிறது என்று பதிலளிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு ஆகியவை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகள் சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தால் செய்யப்படுவதாகவும் திமுக எம்.பி. கிரிராஜனின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை, கோவையில் மல்டிமாடல் லாஜிஸ்டிக் பூங்கா: திமுக எம்பி கிரிராஜனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் appeared first on Dinakaran.