* ரூ.80 லட்சத்தில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிப்பு
* தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர்
சென்னை: சென்னை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைப்பதற்கு ரூ.80 லட்சத்தில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அதிகளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது.
அதேபோல் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் சென்னைக்கு வருகின்றனர். பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்கு வந்து செல்கின்றனர். காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும். அதிலும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், அச்சரப்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சென்னைக்கு வரும் வாகனங்கள் மறைமலை நகர் ஜிஎஸ்டி சாலையிலிருந்து தாம்பரம் கடப்பதற்கு பல மணி நேரங்கள் ஏற்படும். இதனை தொடர்ந்து சென்னை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சென்னை – தாம்பரம் – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணைய அதிகாரிகள் கூறியதாவது : சென்னை திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நெடுஞ்சாலையாக உள்ளது. செங்கல்பட்டு திண்டிவனம் சாலையில் தினசரி 65,000 கார்களும், தாம்பரம் திண்டிவனம் சாலையில் ஒரு லட்சம் கார்களும் கடந்து செல்கின்றன. நாளுக்கு நாள் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக வேறு சாலையை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டுக்கு முன்பாக ஜி.எஸ்.டி சாலையில் மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆர் பூஞ்சேரி வழியாக புதிய சாலை அமைக்கப்படுகிறது. தற்போதுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்து அளிக்க வேண்டும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்து இருந்தது, இந்த கோரிக்கையின் தொடர்பான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. சுமார் ரூ.80 லட்சம் செலவில் இந்த விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. இந்த புதிய சாலை மூலம் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து திருப்பி விடபட்டால் மதுராந்தகம் முதல் தாம்பரம் இடையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கருங்குழி-பூஞ்சேரி இடையே 32 கி.மீ.க்கு புதிய சாலை appeared first on Dinakaran.