சென்னை: சென்னை துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுக லிமிடெட் (கேபிஎல்) ஆகியவற்றின் கடந்த 2024-25ம் நிதியாண்டில் கடந்த ஏப்.1 2024 முதல் மார்ச் 31, 2025 வரையிலான செயல்பாட்டு மற்றும் நிதி செயல்திறன் குறித்த சிறப்பம்சங்கள்: சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் முதன்முறையாக 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து, ஒருங்கிணைந்த சரக்கு உற்பத்தியில் கடந்த ஆண்டு மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்னை கடந்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன்னும், காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன் என பங்களிப்பு செய்துள்ளன. இது, ஆண்டுதோறும் இரு துறைமுக நிர்வாகங்களிலும் 6.7 சதவீத ஒருங்கிணைந்த அதிகரிப்பை குறிக்கிறது. மேலும், சென்னை துறைமுகம் 1.8 மில்லியன் மெட்ரிக் டன் அளவை கடந்து, கொள்கலன் கையாளுதலில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.
இதில் ஒரே நாளில் 6,256 டிரெய்லர்களைக் கையாளுவதில் அதிகபட்ச சாதனை பெற்றுள்ளது. இதில் காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அதிகபட்ச சரக்கு கையாளுதல் அளவை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், அதிகபட்ச மாதாந்திர சரக்கு கையாளுதலாக 4.58 மில்லியன் டன்களைப் பதிவு செய்துள்ளது. இங்கு 1,110 கப்பல்களைக் கையாண்டது மிகப்பெரிய சாதனை எண்ணிக்கையாகும். இதன்மூலம் சென்னை துறைமுக செயல்பாடுகளில் இருந்து ரூ.1088.22 கோடி வருவாயை எட்டியது. அதேபோல் காமராஜர் துறைமுகத்தில் செயல்பாடுகள் மூலம் ரூ.1130.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், காமராஜர் துறைமுகம் வரிக்கு பிந்தைய லாபமான ரூ.545.95 கோடியை பதிவு செய்து, முதன்முறையாக ரூ.500 கோடி வரம்பைத் தாண்டியது. சென்னை துறைமுகத்தின் நிகர மதிப்பு ரூ.3040.57 கோடியை எட்டியது. இதன்மூலம் முதன்முறையாக ரூ.3000 கோடியைத் தாண்டியுள்ளது. சென்னை துறைமுகத்தின் மூலதன செலவு ரூ.147.48 கோடி. இது கடந்த 5 ஆண்டுகளில் மிக உயர்ந்தது. இதில் 61.95 சதவீத செயல்பாட்டு விகிதத்தை அடைந்தது.
சென்னை துறைமுகத்தில் ரூ.41.83 கோடியில் பார்க்கிங் பிளாசாவின் மேம்பாடு, மப்பேட்டில் ரூ.1424 கோடியில் மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா, சென்னை மீன்பிடி துறைமுகத்தை ரூ.134 கோடியில் நவீனமாக்கி மேம்படுத்தல், சென்னை துறைமுகத்தின் பாரம்பரிய நினைவு சின்ன கல் கட்டிடத்தை ரூ.5.25 கோடியில் மீட்டமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டப் பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படுகிறது. காமராஜர் துறைமுகத்தில் வடக்கு பிரேக்வாட்டர் மறுசீரமைப்பு, எண்ணூர் க்ரீக்கில் பயிற்சி சுவர் கட்டுமானம், கடல் பயணிகளின் வசதிக்கான உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளும் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இதுபோன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு, சரக்குகளை கையாள்வதில் மேலும் பல்வேறு சாதனைகளை படைத்திட திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம் என்று சென்னை துறைமுகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தின் கடந்த நிதியாண்டின் செயல்பாடு, செயல்திறன்கள் appeared first on Dinakaran.