சென்னை: ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா இந்த ஆண்டு, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று (18ம் தேதி) வரை 3 நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்புலக ஆளுமைகள் இப்புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியா, பெனின், புரூனே, பல்கேரியா, சிலி, சைப்ரஸ், எஸ்தோனியா, எத்தியோப்பியா, கானா உள்ளிட்ட 34 நாடுகள் முதல் முறையாக பங்கேற்றன. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில், 78 அரங்கங்கள், குழந்தைகளுக்காக 3 சிறப்பு அரங்கங்கள் என 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.
புகழ்பெற்ற பன்னாட்டு பதிப்பகங்களான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், பென்குயின் ரேண்டம் ஹவுஸ், ஹார்ப்பர் ஹாலின்ஸ், ஹெஷட், ரௌட்லட்ஜ், ப்ளூம்ஸ்பெர்ரி போன்றவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பல்வேறு கூட்டு வெளியீடுகளை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை – தமிழ்நாட்டு வரலாற்றை – தமிழர் பண்பாட்டை ஆங்கில மொழி மொழிபெயர்ப்புகள் வாயிலாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பணியினை சிறப்பாக செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கான மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்தாண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் தமிழ் மொழியில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங்களும் அயலக மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக அரபி மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்ச் மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தூதர் விருதினை PWB Global Ambassador, ASEAN Publishing Association, African Publishers Network (APNET), Francophone Ambassador ஆகிய பதிப்பகம் மற்றும் அமைப்பிற்கும், உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருதினை ரியாத் புத்தக கண்காட்சிக்கும், பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா மற்றும் பேராசிரியர் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும்,
நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை கிறிஸ்டியன் வியிஸ் மற்றும் கே.எஸ்.வெங்கடாசலம் ஆகியோருக்கும், கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருதினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்திற்கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருதினை துருக்கி நாட்டின் TEDA-விற்கும், புத்தக ஊக்குவிப்பு விருதினை மங்கோலியா மேஜிக் பாக்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையத்திற்கும், உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருதினை பொலானா குழந்தைகள் புத்தக கண்காட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, காங்கிரஸ் எம்பி சசி தரூர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர் கொண்டனர்.
* கல்வி அமைச்சருக்கு முதல்வர் பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் தனித்துவமான முன்னெடுப்பு. இது புதிய மைல்கற்களை அடைந்துள்ளது. 2023ல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024ல் 752 என வளர்ந்து, தற்போது 2025ம் ஆண்டில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005, அயலக மொழிகளில் இருந்து தமிழுக்கு 120) மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சாதனைக்கும், தமிழிலக்கியம் உலக அளவில் கவனம் பெறவும் நமது திராவிட மாடல் அரசின் மொழிபெயர்ப்பு நல்கையும் ஆதரவும்தான் காரணம் என தமிழ் அறிவுலகம் பாராட்டுகிறது. ஞானபீடம் அல்ல, நம் எழுத்தாளர்கள் நோபல் பரிசே பெற உயர்வுள்ளுவோம். இவ்வியத்தகு சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும், துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள் என கூறியுள்ளார்.
The post சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த பன்னாட்டு புத்தக கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: பதிப்பு துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருது appeared first on Dinakaran.