சென்னை: சென்னையில் உள்ள நீர்நிலைகளில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நீர்நிலைகளின் தன்மை குறித்து சென்னை ஐஐடி சார்பில் கடந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சென்னையின் முக்கிய நீர்நிலைகளான அடையாறு, பக்கிங்காம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி போன்ற நீர்நிலைகளில் மாதிரிகளை எடுத்து சோதித்துள்ளது. இதுதவிர, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பெருங்குடி குப்பை கிடங்கை சுற்றியுள்ள நீர் மாதிரிகளையும் பரிசோதித்துள்ளது. அந்த மாதிரிகளில், மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பி.எப்.ஏ.எஸ் எனப்படும் நிரந்தர ரசாயனங்கள் அனுமதிக்கத்தக்க அளவை விட அதிகளவில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றை சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டிருந்தது. மேலும், இந்த பி.எப்.ஏ.எஸ் ரசாயனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, நான்ஸ்டிக் பாத்திரங்கள், சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தும் பொருட்கள், ரெயின்கோட், உணவு பேக்கேஜிங் செய்வதற்கான பொருட்கள், ஏரோஸ்பேஸ், வாகனம், கட்டுமானம் மின் உபகரணங்கள் போன்ற துறைகளின் உற்பத்திகள் ஆகியவற்றில் இந்த ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனம் பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளுடன் நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரிலும் கண்டறியப்பட்டுள்ளன, என்று ஐஐடி ஆய்வு கூறி இருந்தது. இந்நிலையில், சென்னை நீர்நிலைகளின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ரசாயனங்கள் குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மறுத்துள்ளது. பாலிப்ளோரோல்கைல் சப்ஸ்டன்சஸ் என்பதன் சுருக்கமே பி.எப்.ஏ.எஸ். இது, கரிம ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ரசாயனம், நீரில் எளிதில் உடையாது, அழியாது என்பதால், ‘நிரந்தர ரசாயனங்கள்’ என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பி.எப்.ஏ.எஸ் ரசாயனம் நீரில் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிப்பதற்கான தர நிர்ணய அளவீடு இந்தியாவில் இல்லை. அமெரிக்கா அல்லது உலக சுகாதார மையம் என்ன வகுத்துள்ளதோ அதைத்தான் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை குறிப்பிடும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பி.எப்.ஏ.எஸ் ரசாயனங்கள் மிக அதிகமாக இருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்து இருப்பதை மாசுகட்டுப்பாடு வாரியம் மறுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுகட்டுப்பாடு வாரியம் சமர்ப்பித்துள்ளது. அதில், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் 30 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அளவிடத்தக்க அளவை விட குறைவாகவே அந்த ரசாயனங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதே நேரம் இரும்பு, ப்ளோரைடு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகவும், இவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கண்ணன் கூறுகையில், ‘‘எந்தவொரு கழிவும் நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும், இல்லையெனில், கழிவுகளை அவர்களின் ஆலைகளிலேயே வைத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறோம்.
மேலும், வீடுகளிலிருந்து உருவாகும் கழிவுநீரை தடுத்து அதை சுத்திகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்,’’ என்றார். இந்த ஆய்வில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் இந்துமதி கூறுகையில், ‘‘நாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் மாதிரிகளை எடுத்து மாசுகட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான ஆய்வு முறைமைகள், அதிஉயர் உபகரணங்களை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே சரியான தரவுகள் கிடைக்கும். மற்ற கருவிகள், குறைந்தளவிலான அளவீடுகளை காட்டாது, அதிகமாக உள்ளவற்றை மட்டும்தான் காண்பிக்கும். அவற்றை அளவிட முடியாத அளவில் இருப்பதாகக் காட்டிவிடும்,’’ என்றார். இதற்கு பதிலளித்த கண்ணன், ‘‘அதி உயர் கருவிகளையே நாங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தினோம். வருங்காலத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து ஒரே இடங்களில் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய தயாராக இருக்கிறோம்,’’ என்றார்.
The post சென்னை நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன: மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வறிக்கை appeared first on Dinakaran.