பெங்களூரு/சென்னை: தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உட்பட நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான், அச்சப்படத் தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய புதிய தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக, கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் 2 ஹெச்எம்பிவி (HMPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.