அவனியாபுரம்: மதுரையில் உள்ள விமான நிலைய தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்ததாவது:ஒன்றிய அரசு முதலில் மும்பை விமான நிலையத்தை தனியார்மயம் என்ற போர்வையில், அதானி குழுமத்துக்கு தாரைவார்த்தது. இதனை தொடர்ந்து 2019ல் விமான நிலைய தனியார் மயமாக்கல் திட்டத்தின் அடிப்படையில், லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, குவாஹாட்டி, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான ஏலங்களை அதானி குழுமம் பெற்று 50 வருட குத்தகையில் அவற்றை பராமரித்து அதற்கான கட்டணங்களை வசூலித்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தையும் தனியார்மயமாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால், அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மேலும் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்க சமீபத்தில் ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை தொடங்கப்பட்டு அதுகுறித்த அமைச்சரவைக் குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு அமைச்சகங்களிலிருந்து பதில்களைப் பெற்று, விமான நிலையத்தை தனியார் மயமாக்கல் குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.
இதன்படி, லாபம் இல்லாத விமான நிலையங்களை அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பெரிய விமான நிலையத்துடன் இணைத்து, தனியாருக்கு குத்தகை விட தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி போன்ற முக்கிய பிராந்திய விமான நிலையங்களும் அடங்கும். இந்த பணிகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதன் வாயிலாக வருவாய் ஈட்டுதல் என்ற என்எம்பி திட்டம் மூலம் செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சொந்தமான சென்னை, மதுரை, பத்தூர், நாக்பூர், பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன், ராஜமுந்திரி உள்ளிட்ட 25 விமான நிலையங்களை தனியாருக்கு 50 வருட குத்தகைக்கு விட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குத்தகை காலத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளராக இந்திய விமான ஆணையம் இருக்கும்.
ஆனால் பணிகள் அனைத்தையும் குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருமானம் ஈட்டும். இந்த நடவடிக்கை என்பது, பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதில் ஒன்றிய அரசு ஆர்வமாக இருப்பதை காட்டுவதுடன், தனியாரை வளர்க்கும் வேலைகள் வாயிலாக அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது தெளிவாகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு பேரிழப்பாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post சென்னை, மதுரை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகையா?: ஒன்றிய அரசு ஆலோசனை: தொழிற்சங்கத்தினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.