சென்னை: பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி திமுகவினர் செய்யும் அரசியல் கீழ்த்தரமானது. தமிழகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது.
டாஸ்மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜகவினரை, கொடுமைப்படுத்தும் காவல்துறையை கண்டித்து, காவல்துறையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளின் வாசலில் முதல்வரின் படத்தை ஒட்டும் போராட்டத்தை மகளிர் அணியினர் நடத்தினார்கள்.