சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில், டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்துவதால் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என தெரு நாய்கள் பயமுறுத்தாதவர்கள் யாருமே இல்லை.
தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,81,347 தெரு நாய்கள் உள்ளன. இதில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், வளசரவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் தெருநாய்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 23,980 தெருநாய்களும் ஆலந்தூர் மண்டலத்தில் 4875 தெரு நாய்களும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்தாண்டு 10,100 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7,265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 1,05,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கவும், அவற்றால் ஏற்படும் விளைவுகளை தடுக்கவும் சென்னை மாநகராட்சி டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.
அதாவது, குறிபிட்ட நாய் , எந்த மண்டலத்தை சேர்ந்தது, கருத்தடை செய்யப்பட்டதா..? நாய்களுக்கு எதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவற்றிற்கு மருத்துவம் பார்க்க என சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் கருவிகள் தெருநாய்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்களை டிஜிட்டல் கருவிகள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது. நாயின் கழுத்தின் கீழ் மைக்ரோசிப்கள் பொருத்தப்பட்ட க்யூஆர் குறியீடுகள் கொண்ட காலர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த க்யூஆர் குறியீட்டில் வயது, நிறம், தடுப்பூசி நிலை, கருத்தடை வரலாறு மற்றும் அசல் இடம் போன்ற விவரங்கள் இருக்கும். நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி ஊழியர்கள் நாயை பிடிக்கும்போது, புவிசார் ஒருங்கிணைப்புகளுடன் கூடிய புகைப்படத்தைப் பதிவேற்றுவார்கள். இந்தத் தரவு பயன்பாட்டில் சேமிக்கப்பட்டு, நாயின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள மைக்ரோசிப்புடன் இணைக்கப்படும். வெவ்வேறு சுற்றுப்புறங்களுக்கு நாய்களை இடமாற்றம் செய்வதைத் தடுக்க தெருநாய்களின் டிஜிட்டல் சுயவிவரங்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள். முதற்கட்டமாக 3,500 காலர்களை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு நாய்கள் தெரியும் வகையில் காலர்களில் வெளிச்சம் தெரியும் வகையில் உள்ளது.
காலர்கள் சேதப்படுத்தப்பட்டாலும், சிப் தகவலைத் தக்க வைத்துக் கொள்ளும். சென்னையில் 20% தெருநாய்களுக்கு மட்டுமே ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு, 27% கிருமி நீக்கம் செய்யப்பட்டதால், நிகழ்நேரத் தரவு, தடுப்பூசி போடாத நாய்களை வேகமாகக் கண்டறிய உதவும். பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தடுப்பூசி தேதிகளை சரிபார்க்க க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம் மற்றும் பூஸ்டர் ஷாட்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லலாம். இடம் வாரியாக நாய் கடி சம்பவங்களைக் கண்காணிப்பது அதிக ஆபத்துள்ள மண்டலங்களைக் கண்டறிய இவை சென்னை மாநகராட்சிக்கு உதவும். இவ்வாறு தெரிவித்தார்.
The post சென்னை மாநகராட்சி பகுதியில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்: முதற்கட்டமாக 3500 கருவிகள் கொள்முதல் appeared first on Dinakaran.