சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டு பட்ஜெட் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, மக்களின் தேவைகள், சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் வரும் 19ம் தேதி ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
மேயர் பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தாண்டு எந்த மாதிரியான புதிய திட்டங்கள் இருக்கும் என சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், ஆங்காங்கே நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் எப்போது முடிவுறும்? என்பது குறித்தும், அதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் நிறைந்த முக்கிய இடங்களில் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்பாலம் அமைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
அதன் அடிப்படையில், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், அதிகரித்து வரும் போக்குவரத்து, நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 21ம் தேதி நடைபெறுகிறது.
The post சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19ம் தேதி தாக்கல்: பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.