சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் வரும் நிதியாண்டில் (2025-26) வருவாய் வரவு ரூ.5145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5214 கோடியாக இருக்கும். மூலதன வரவு ரூ.3121 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3190 கோடியாகவும் இருக்கும். சொத்து வரி நடப்பு நிதியாண்டில் ரூ.1900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது வரும் நிதியாண்டில் ரூ.2020 கோடியாக உயரும். அதேபோல் தொழில் வரி ரூ.550 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயரும்.