சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 14 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கியது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, பெற்றோரிடம் பேசி, மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஊக்குவித்தனர். அதன் பயனாக, கடந்தாண்டைவிட, இரண்டு மடங்கிற்கு மேல் மாணவர் சேர்க்கை நடந்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிகளில் கடந்தாண்டு 6,000 மாணவர்கள் சேர்ந்த நிலையில் நடப்பாண்டில் 15,618 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக யூ.கே.ஜி.யில் 7,386 குழந்தைகள் சேர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரிப்பு appeared first on Dinakaran.