சென்னை: விமான பயணிகளை இறக்கி விட, ஏற்றி செல்ல சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் மாநகர பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வான்வழி பயணம் மேற்கொள்ள மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் விமான நிலையம் சென்று வர மெட்ரோ ரயிலை தவிர வேறு பொது போக்குவரத்து சேவைகள் இல்லை. தனியார் வாடகை டாக்ஸி வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்குள் எப்படி பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றனவோ, அதேபோல் விமான நிலைய வளாகத்திற்குள்ளும் மாநகர பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் விரைவில், சென்னை சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே சென்று, பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், விமான நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது.
இது குறித்து மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திட்ட வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினர் விமான நிலைய வளாகம் வரை எம்டிசி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், முடிந்தவரை விமான நிலையத்திற்கு அருகில் பயணிகளை கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்களை மேற்கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்த உடனே, விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் மற்றும் தாம்பரம் அருகே கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போது அந்த வழித்தடங்களில் சிற்றுந்துகளை மட்டுமே அரசு இயக்கி வருகிறது. குன்றத்தூர் வரையில் S69 மற்றும் தாம்பரம் கிழக்கு வரை S100 எனும் சிற்றுந்துகளை இயக்குகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் சேர்த்து, ஒரு முறை 80 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளில் பயணிக்கவும், அல்லது கூடுதல் கட்டணம் கொடுத்து கார் அல்லது ஆட்டோவில் பயணிக்க வேண்டியும் உள்ளது. விமான நிலைய வளாகம் வரை பேருந்து சேவையை நீட்டிக்க அனுமதி வழங்க, ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முறையாக அணுகினால் விமான நிலைய வளாகத்திற்குள் பேருந்துகளை அனுமதிக்க, தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதேநேரம், பேருந்துகளை திருப்புவதற்கு, பார்க் செய்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான இடவசதி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பேருந்துகள் செல்ல விரைவில் அனுமதி: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.