* புறப்பாடு, வருகை தாமதங்கள் குறையும்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ‘ஏப்ரான்’ பகுதியில் புதிய மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு, கடந்த 15ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், இனி ஒரே நேரத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதோடு, விமானங்கள் புறப்பாடு, வருகையில் தாமதங்கள் குறையும். சென்னை விமான நிலையத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 470க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்கள் சென்னையில் வந்து தரை இறங்குவதற்கு 2 ஓடு பாதைகள் உள்ளன. அதில் முதல் மெயின் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டர் நீளமும், இரண்டாவது ஓடுபாதை 2.89 கீ.மீ. நீளமும் உள்ளன. அதேபோல், விமானங்கள் நிற்கும் இடங்களான ‘பே’க்கள் (Bay) சுமார் 130 பேக்கள் உள்ளன. அதில், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் பயன்பாட்டுக்காக சுமார் 60 பேக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற பேக்கள், சரக்கு விமானங்கள், தனி விமானங்கள், ஏர் ஆம்புலன்ஸ் விமானங்கள் போன்றவைகள் நிற்பதற்கும், அதோடு விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ரிமோட் பேக்களில், நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள், பழுதடைந்து பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்படும் விமானங்கள் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.அதோடு சென்னை விமான நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஓடுபாதைகளில் வந்து தரை இறங்கும் விமானங்கள் நிற்கும் இடங்களான பேவுக்கு செல்வதற்கு முன்னதாக, ஓடுபாதைக்கும், பேவுக்கும் இடையே, இணைப்பு சாலைகளாக, டாக்ஸி வேக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானங்கள் ஓடுபாதையில் இறங்கி டாக்ஸி வே வழியாக, விமானம் நிற்கும் இடத்திற்கு செல்லும் போது, மிகவும் மெதுவாக சென்று கொண்டு இருந்தன.
இதனால் ரன்வேயில் அடுத்த விமானம் வந்து தரையிறங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. எனவே டாக்ஸி வேயில் விமானம் சற்று வேகமாக இயக்குவது குறித்து, விமான பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனைகள் நடத்தினர். அப்போது முக்கியமான டாக்ஸி வேயான எப் டாக்ஸி வே, வளைவாக இருந்தது தெரிய வந்தது. எனவே அந்த டாக்சிவேயின் வளைவை நீக்கி, நேராக செல்வது போல் மாற்றி அமைக்கும் பணி நடந்தது. அதேபோல், வேறு சில டாக்ஸி வேக்களும், அகலப்படுத்தப்பட்டு, விமானங்கள் வேகமாக செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. அதோடு டாக்ஸி வே எப் என்பது இனிமேல், டாக்ஸி வே யூ என்று மாற்றப்பட்டுள்ளது. விமானங்கள் ஓடுபாதையில் இருந்து, டாக்ஸி திரும்புவதற்கு முன்னதாக, ஓடுபாதை அருகே புதிதாக, ஹோல்டிங் பாய்ன்ட் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பின்னால் வரும் விமானம் தாமதம் இல்லாமல் ஓடுபாதையில் இறங்க முடியும்.அதோடு சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானங்கள் நிற்கும் பகுதிகளான பேக்கள் 7, 8 மற்றும் 9 விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் சரக்கு விமானங்கள் வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி கையாள முடியும். இதேபோல், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் ‘ஏப்ரான்’ பகுதிகளில் கூடுதல் மேம்பாட்டு அபிவிருத்தி பணிகள் நடந்து, கடந்த 15ம் தேதி முதல் இவைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இருப்பதோடு, விமானங்கள் புறப்பாடு தரை இறங்குவதில், தாமதங்கள் ஏற்படாமல் குறித்த நேரத்தில், தரையிறங்கி புறப்படுவது போன்றவைகள் செயல்படுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சென்னை விமான நிலையத்தில் ஏப்ரான், சரக்கு விமானங்கள் நிற்கும் பகுதிகள் விரிவாக்கம்: கூடுதல் விமானங்கள் வந்து செல்லும் appeared first on Dinakaran.