சென்னை: டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானமும், அதேபோல் சென்னையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதோடு நேற்று அதிகாலை 4.40 மணிக்கு அந்தமான் விமானம், டெல்லிக்கு காலை 5.55 மணி, காலை 9.50 மணி விமானங்கள், மும்பைக்கு காலை 6.40 மணி விமானம், கொச்சிக்கு காலை 7.55 மணி விமானம், பாட்னாவுக்கு காலை 11.40 மணி விமானம் மற்றும் ஹாங்காங், பிராங்க்பர்ட், உள்பட 12 புறப்பாடு விமானங்கள், அதேபோல் 9 வருகை விமானங்கள் என மொத்தம் 21 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதில் சில விமானங்கள் 3 மணி நேரம் வரையில் தாமதமானது.
ஆனால், இந்த விமானங்கள் தாமதங்கள் குறித்தும், அதற்கு என்ன காரணம் என்றும், விமானங்கள் எப்போது வரும், எப்போது புறப்பட்டு செல்லும் என்பது குறித்தும் பயணிகளுக்கு முறையான அறிவிப்புசெய்யப்படவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். டெல்லியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று, மழையுடன் மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
The post சென்னை விமான நிலையத்தில் 2 ஏர் இந்தியா விமானம் ரத்து appeared first on Dinakaran.