செம்பனார்கோயில் : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், திருச்சம்பள்ளி, மேமாத்தூர், மேலப்பாதி, ஆக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிப்பதால் செங்கல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல் தயாரிக்க கோடைக்காலம் தான் ஏற்றக்காலமாகும். இதனால் வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் செங்கல் தயாரிக்கும் பணியில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதமே வெயில் அதிகமாக இருப்பதால் செங்கல் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலமாகும். அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணுடன், ஆற்றிலிருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்தி, அச்சுகளில் போட்டு செங்கற்களை வார்த்து எடுத்து வெயலில் நன்கு காய வைப்போம்.
அதன் பின்னர் காய வைத்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம். தொடர்ந்து செங்கற்களை விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். இந்த பணியின் போது ஏப்ரல், மே போன்ற காலங்களில் சில சமயம் கோடை மழைப்பெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்பாய்களை பயன்படுத்தி செங்கற்களை மூடி வைப்போம்.
ஆனாலும் மழைநீர் சூழ்ந்த செங்கற்கள் கரைந்துவிடுகிறது. மேலும் செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணும் சரிவர கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. இதனால் செங்கல் நல்ல விலைக்கு போனால்தான் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post செம்பனார்கோயில் அருகே செங்கல் தயாரிப்பு பணி துவங்கியது appeared first on Dinakaran.