*விவசாயிகள் வேதனை
செம்பனார்கோயில் : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, பயறு வகைகள், வாழை, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், சேமங்கலம், குரங்குப்புத்தூர் மற்றும் சுற்று பகுதியில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.
நிலக்கடலையை பொருத்தவரை ஜூன்- ஜூலை மற்றும் டிசம்பர்- ஜனவரி ஆகிய மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றகாலங்கள் ஆகும். சில பகுதிகளில் கோடை சாகுபடியும் செய்யப்படுகிறது. இந்த நிலக்கடலை பயிருக்கு 110 நாட்கள் சாகுபடி காலமாகும்.
வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்களில் நிலக்கடலை சாகுபடி நன்றாக செய்யலாம். விதைக்கும்போது மண் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் உயிர்நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் ஈர தன்மையை பொருத்து நீர் பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிலக்கடலை சாகுபடியில் மகசூல் பெறலாம்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுததி உள்ளது. வெயில் சுட்டெரிப்பதால் நிலக்கடலை செடிகளின் இலைகள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கத்தில் இருந்து நிலக்கடலை பயிரை காப்பாற்ற தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுமார் 50 நாள் பயிரான நிலக்கடலை செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி வருகிறது. இதனால் நிலக்கடலை செடிகளை காப்பாற்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி தெளிப்பான் மூலம் தண்ணீரை பாய்ச்சி வருகிறோம். இதுவும் குறைந்தளவே கைக்கொடுக்கிறது. வெயில் கடுமையாக இருப்பதால் பூக்கள் கருகி மகசூல் குறையும் நிலை ஏற்படலாம்.
இதனால் போதிய லாபம் கிடைக்காது. மேலும் வியாபாரிகளும் குறைந்த விலைக்கு நிலக்கடலையை கொள்முதல் செய்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் நிலக்கடலையை சாகுபடி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
The post செம்பனார்கோயில் பகுதியில் வெயில் தாக்கத்தால் நிலக்கடலை பயிர்கள் கருகும் அபாயம் appeared first on Dinakaran.