செய்யாறு: செய்யாறு சிப்காட்டில் உள்ள உதிரி பாக தொழிற்சாலையில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகியதாக கூறப்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கார், பஸ் போன்ற வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இன்று அதிகாலை 5 மணியளவில் மின்கசிவு காரணமாக கெமிக்கல் சேமிப்பு அறையில் திடீர் விபத்து ஏற்பட்டது.
கெமிக்கல் என்பதால் வெடி சத்தத்துடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ. பலகோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. அதேநேரத்தில் அந்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செய்யாறு சிப்காட்டில் உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ.பல கோடி பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.