விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மருத்துவரை மிரட்டியதாக செவிலியர் மற்றும் அவரது பெற்றோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 23 வயது இளம் பெண் ஒருவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023, செப்.9 அன்று அப்பெண் செவிலியரை மருத்துவர் ரகுவீர் என்பவர் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் செவிலியர் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மருத்துவர் ரகுவீரை கைதுசெய்தனர். விருதுநகர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு மருத்துவர் ரகுவீர் ஜாமீனில் வெளிவந்தார்.