சென்னை: சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1102.25 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.564.44 கோடி செலவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தில் நிர்வாக அலுவலகம், விருந்தினர் மாளிகை மற்றும் நுழைவாயில், கால்நடை பண்ணை வளாகத்தில் நாட்டின மாடுகள் பிரிவு, வெள்ளாடுகள் பிரிவு, செம்மறியாடுகள் பிரிவு, நாட்டு கோழியின பிரிவுகள், நவீனகுஞ்சு பொரிப்பகம், கோழித் தீவன உற்பத்தி ஆலை ஆகியவையும், மீன்வளர்ப்பு செயல்முறை வளாகத்தில் மறுசுழற்சி முறையில் தீவிர மீன்குஞ்சுகள் உற்பத்தி பிரிவு, அலங்கார மீன் வளர்ப்பு பிரிவு, மீன் கழிவுகளை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் பிரிவு ஆகியவையும், நிர்வாக கட்டிடம், வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதியுடன் கூடிய முதுநிலை கல்வி மையம், விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகத்தில் நவீன பயிற்சி வளாகம், ஒருங்கிணைந்த மாதிரி கால்நடை பண்ணைகள், கால்நடை மருத்துவ அலுவலர்கள் விடுதி, பண்ணையாளர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டமைப்பு பணிகள் நபார்டு தேசிய வேளாண் வளர்ச்சி வங்கி மூலம் ரூ.447.05 கோடி கடனுதவி பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கென தேவையான கால்நடைகள், உபகரணங்கள், மருந்து பொருட்கள் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவைக்கான குடிநீரை வழங்க ரூ.262.16 கோடி செலவில் சிறப்பு குடிநீர் வழங்கல் திட்டம், செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 70 உயர்தர நாட்டின பசுக்கள், 500க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள், 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஆண்டுதோறும் 3,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
The post சேலத்தில் ரூ.565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.