சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை கழக விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல் பெரியார் பல்கலை கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் பவுண்டேஷன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்குவதாக கூறி துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலை கழகத்தின் ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் சேலம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை ஜாதி குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலு உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் கருப்பூர் காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் எந்த பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றும் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.திலக் ஆஜராகி வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும் இதற்குறிய ஆதாரங்கள் உள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் வாதங்களை முன்வைத்தார். இதை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், கணினி ஆசிரியர் துரை, கணினி துறை பேராசிரியர் சதிஷ், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.