சேலம்: பெரியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருக்க கூடிய ஜெகநாதன் வரும் மே மாதம் 19ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெற 2 மாத காலங்களே உள்ள நிலையில் தனக்கு ஆதராவாக உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது, புதிதாக பணி நியமனங்களை செய்வது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என பெரியார் பல்கலைகழக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வரும் 5-ம் தேதி ஆட்சிக்குழு கூட்டம் பெரியார் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் இந்த ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் துணைவேந்தர் தனக்கு ஆதரவாக உள்ள பிரிவு அலுவலராக பணியாற்ற கூடிய விஷ்னு மூர்த்தி என்பவருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதாகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை அவர் நிறுத்திவைத்துள்ளதாகவும், பகுபாடு பார்த்து பதவி உயர்வு வழங்க அவர் துடிப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 80 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையையும் ஆட்சி குழுவினர் ஒப்புதல் பெற இருப்பதாகவும் தகவல் வெளியானதை அடுத்து பெரியார் பல்கலைகழக தொழிலாளர் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏற்கனவே துணை வேந்தர் மற்றும் முன்னாள் பதிவாளர் மீது பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஓய்வு பெறவுள்ள துணை வேந்தர் கடைசி 3 மாதத்தில் எந்த பணி நியமங்களும் செய்ய கூடாது என விதி உள்ளது. எனவே துணை வேந்தர் ஜெகநாதன் எந்தவிதமான பதவி உயர்வோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என தமிழக முதல்வர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறைக்கும் தொழிலாளர்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு என புகார் appeared first on Dinakaran.