சென்னை: அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக ஒரு வழக்காவது பதிவு செய்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, இந்த பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?. அவரது பேச்சு பெண்களை சைவ வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அமைச்சர் பொன்முடியின் பேச்சு வீடியோ இன்னும் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன. இதே பேச்சை வேறு ஏதேனும் எவரேனும் பேசி இருந்தால் இதற்குள் 50 வழக்குகளாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ, அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே, நடிகை கஸ்தூரி, எச்.ராஜா, அண்ணாமலை போன்றோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனையும் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தமிழக டிஜிபி மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நேற்று மாலை 4.45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இதுவரை 5 புகார்கள் வந்துள்ளன என்றார். இதைக்கேட்ட நீதிபதி 5 எப்ஐஆர் பதிய வேண்டாம். ஒரு எப்ஐஆர் பதிவு செய்து வரும் 23ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
The post சைவம், வைணவம் குறித்து வெறுப்பு பேச்சு பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.