சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் விவசாயத் துறை அமைச்சராக பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 606 ரூபாய் மதிப்புக்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா மற்றும் மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.