வேலூர்: வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007-2009 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.