நியூயார்க்: தனது சொந்த நிறுவனத்திற்கே எக்ஸ் தளத்தை எலான் மஸ்க் விற்றுள்ளார். உலக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், ‘எனது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்ஏஐ, தனது சமூக வலைதளமான எக்சை-ஐ (முன்பு டுவிட்டர்) 33 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது’ என அறிவித்தார். இந்த நடவடிக்கையானது, எக்ஸ்ஏஐ-யின் மேம்பட்ட ஏஐ திறன் மற்றும் நிபுணத்துவத்தை எக்சின் மிகப்பெரிய வரம்போடு கலப்பதன் மூலம் மகத்தான ஆற்றலைத் திறக்கும்’ என்று மஸ்க் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
600 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள எக்ஸ் தளத்தின் எதிர்காலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எக்ஸ்ஏஐ உடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு அறிவிப்பில், ‘தரவு, மாதிரிகள், கணக்கீடு, விநியோகம் மற்றும் திறமை ஆகியவற்றை இணைக்க நாங்கள் அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கிறோம். இது உலகைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், மனித முன்னேற்றத்தை தீவிரமாக துரிதப்படுத்தும் தளத்தை உருவாக்க எங்களுக்கு உதவும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் இணைக்கப்படுகின்றன. எக்ஸ்ஏஐ-யின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், எக்ஸ்-யின் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் உள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டின் பிற்பகுதியில் எலான் மஸ்க், டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அன்பிறகு டுவிட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றி ஏராளமான அப்டேட்டுகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சொந்த நிறுவனத்திற்கே எக்ஸ்-ஐ விற்ற மஸ்க் appeared first on Dinakaran.