*கோயிலில் திருடப்பட்டதா? என போலீஸ் விசாரணை
சோளிங்கர் : சோளிங்கர் அருகே கரும்பு தோட்டத்தில் இருந்து 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது. அந்த சிலைகளை கோயிலில் இருந்து யாரேனும் திருடி வந்து மறைத்து வைத்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி ஊராட்சி, புளியமங்கலம் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதேபோல், நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கரும்பு தோட்டத்தின் நடுவில் சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன 2 தீபலட்சுமி சிலைகள் இருந்தன.
இதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக விஏஓ தரணிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சோளிங்கர் தாசில்தார் செல்வி, வருவாய் ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், விஏஓ ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்களிடம் 2 சிலைகளையும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். அவற்றை சோளிங்கர் கருவூலத்தில் ஒப்படைத்து தொல்லியல் துறைக்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சிலைகளை அருகே உள்ள ஏதாவது கோயிலில் இருந்து மர்ம நபர்கள் திருடி வந்து அங்கு மறைத்து வைத்தார்களா? அல்லது சிலைகள் எப்படி அங்கு வந்தது? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சோளிங்கர் அருகே பரபரப்பு கரும்பு தோட்டத்தில் 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு appeared first on Dinakaran.