புதுக்கோட்டை: சட்டவிரோத கனிம கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராமையா சரண்டரானார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக கவுன்சிலர், மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளராகவும் இருந்துள்ளார். சமூக ஆர்வலரான இவர், அந்த பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் குறித்து தொடர்ந்து எதிர்ப்புகுரல் எழுப்பி வந்தார். மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் ஜகபர் அலி, கடந்த 17ம் தேதி அன்று தொழுகை முடிந்து டூ வீலரில் சென்றபோது மினிலாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவி மரியம் இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு, அவரது மகன் தினேஷ், விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசி ஆகியோர் மீது புகார் அளித்தார். திருமயம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொழில் போட்டி காரணமாக முருகானந்தம், அவரது லாரி டிரைவர் சேர்ந்து ஜகபர் அலியை திட்டமிட்டு மினி லாரியால் மோதி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஜகபர் அலி இறப்பு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கல்குவாரி உரிமையாளர் ராசு, தினேஷ், முருகானந்தம், காசி ஆகியோரை திருமயம் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குவாரி உரிமையாளரும் ராமையா சரண் அடைந்தார். நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் குமாரி உரிமையாளர் ராமையா சரண்டர் ஆனார்.
The post ஜகபர் அலி கொலை வழக்கு.. ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குவாரி உரிமையாளர் ராமையா சரண்! appeared first on Dinakaran.