மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் ‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ (என்.எல்.டி.) பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மியான்மரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிரான தடுப்புச் சுவராக மக்கள் ஆங் சான் சூச்சியை இன்னமும் கருதுகிறார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது. மியான்மர் நாடாளுமன்றத்தில் மொத்தம் 476 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் என்.எல்.டி. 346 இடங்களை வென்றிருக்கிறது. ஆட்சி அமைக்கத் தேவையான 322 என்ற பெரும்பான்மைக்கும் அதிகமாகவே அந்தக் கட்சி இடங்களை வென்றிருக்கிறது. ராணுவத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சியான ‘யூனியன் சாலிடாரிட்டி அண்டு டெவலப்மென்ட் பார்ட்டி’ 25 இடங்களை வென்றிருக்கிறது.
சூச்சியின் என்.எல்.டி. கட்சி 2015-ல் முதன்முறையாக நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றபோது அந்த நாட்டை அவர் முழுமையான ஜனநாயகத்தை நோக்கி நகர்த்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராணுவ ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டம் சூச்சி அதிபராவதைத் தடுத்தது. அதற்குப் பதிலாக சூச்சி அந்நாட்டின் கவுன்சிலர் என்ற பொறுப்பை 2015-ல் ஏற்றுக்கொண்டு அதிகாரத்தைக் கையிலெடுத்தார். ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது. நாட்டை ஜனநாயகத்தின் பாதையில் அவர் செலுத்துவார் என்ற நம்பிக்கை மீதும் சந்தேகம் எழுந்தது.
தேர்தல்களை ராணுவம் அனுமதித்தாலும் தனது நலன்கள் பாதுகாக்கப்படுவதை அது உறுதிப்படுத்திக்கொண்டது. கணிசமான நாடாளுமன்ற இடங்கள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறை உள்ளிட்ட மூன்று முக்கியமான துறைகளை ராணுவம் தன்வசம் வைத்திருக்கும். மியான்மரின் சிறுபான்மை இனக்குழுக் கிளர்ச்சியாளர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக சூச்சி வாக்களித்திருந்தாலும் ராணுவம் அவர்களுக்கு எதிரான அழித்தொழிப்பு நடவடிக்கைகளைத் தொடரவே செய்கிறது.
தேர்தல்கள் நடந்தாலும்கூட ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டியானது மியான்மரில் என்றும் தொடரும் நிதர்சனமாகவே இருக்கிறது. தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை மிகப் பெரிய வெற்றியுடன் சூச்சி தொடங்கியிருக்கும் நேரத்தில் சவாலான கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. வெறுமனே ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக அவர் இருக்கப்போகிறாரா, அல்லது நாட்டை முழுமையான ஜனநாயகத்தை நோக்கி அழைத்துச்செல்லப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற முறையில் அந்த நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொண்டு சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துச் செல்லும் தலைவராக அவர் மாற வேண்டும்.