சென்னை: ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்தயத்துக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 10-ம் தேதி முன்பதிவிற்கான இறுதி தேதியாகும். வாட்ஸ்அப் செயலி வழியாகவும் முன்பதிவு செய்வது இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் – (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இருபாலரும் பங்கேற்கலாம். இம்முறை 30 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பார்வைத்திறன் பாதிப்புள்ள ஓட்டப்பந்தய வீரர்கள், சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர்கள் 100 பேர், பிளேடு ரன்னர்ஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளன.