புதுடெல்லி: யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் நடைபெறுகிறது. பிடபிள்யூஎஃப் உலக டூர் 750 சூப்பர் தொடரான இதில் இந்தியாவின் சவாலை பி.வி. சிந்து, லக்சயா சென் ஆகியோர் தோளில் சுமக்க உள்ளனர். ஒலிம்பிக் சாம்பியன்களான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், தென் கொரியாவின் அன் சே யங், உலகின் முதல் நிலை வீரரான ஷி யூகி உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்த சூப்பர் 750 தொடரை இந்திய பாட்மிண்டன் சங்கம் நடத்துகிறது. 2023-ம் ஆண்டில் சூப்பர் 750 ஆக தரம் உயர்த்தப்பட்ட இந்த போட்டி பிடபிள்யூஎஃப் உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொடரின் பரிசுத்தொகை 950,000 அமெரிக்க டாலர் ஆகும். சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 11,000 புள்ளிகள் வழங்கப்படும். தொடரை நடத்தும் இந்தியாவில் இருந்து 21 பேர் களமிறங்குகின்றனர். அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் 3 பேர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 4 பேர், ஆடவர் இரட்டையரில் 2 ஜோடி, மகளிர் இரட்டையரில் 8 ஜோடி, கலப்பு இரட்டையரில் 4 ஜோடி என 21 பேர் இந்தியாவிலிருந்து விளையாட உள்ளனர்.