வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “காஷ்மீரில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல், அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். கொடூரமான தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தரும்” என்றார்.
ரஷ்ய அதிபர் புடின், “இந்த சம்பவம் எந்தவொரு நியாயமும் இல்லாத கொடூர குற்றம். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்த ரஷ்யா உறுதிப்பூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டென் லேயன் தன் எக்ஸ் பதிவில், “பஹல்காமில் பல அப்பாவி உயிர்களை கொன்ற தீவிரவாத தாக்குதல் மிகவும் இழிவான செயல். துக்கத்தில் இருக்கும் இந்திய அரசுக்கும், ஒவ்வொரு இதயத்துக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்தியாவின் மன உறுதி உடைக்க முடியாதது என்பதை நான் அறிவேன். இந்த சோதனையான நேரத்தில் இந்தியாவுடன் ஐரோப்பா துணை நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தன் எக்ஸ் தளத்தில், “காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டனத்துக்குரியது. அன்பானவர்களை இழந்து நிற்பவர்களுக்கு எங்கள் எண்ணங்கள் ஆறுதலாக இருக்கும்” என கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி கூறுகையில், “காஷ்மீரில் நடந்த கொடூரமான, கோழைத்தனமான தாக்குதலை கேட்டு திகைத்து போனேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் நாங்கள் ஆறுதலாக இருப்போம்” என்றார்.
நேபாள பிரதமர் கே.பி.சங்மா ஒலி, “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நேபாளம் ஆறுதல் தெரிவிக்கிறது. எந்தவொரு தீவிரவாத செயலையும் நேபாளம் கடுமையாக கண்டிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் நேபாளம் துணையாக இருக்கும்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியோகுன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காஷ்மீர் தாக்குதலை சீன கடுமையாக கண்டிக்கிறது. அனைத்து வடிவிலான தீவிரவாதத்தையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்றார்.
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வௌியுறவுத்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஜம்முவில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் இரங்கல். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்துள்ளது. இதேபோல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
The post ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் appeared first on Dinakaran.