மதுரை: ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மா.செள.சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், கிராம விழா குழுவினருடன் ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.27) ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்.பி அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள், கிராம விழாக்குழுவினர், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.