மதுரை: ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, ஐகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு, இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தாலுகா, தலைநகரங்களில் நாளை (பிப்.25) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ-ஜியோவின் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம். எனவே, சாலை மறியலுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘ஒரு நாள் அடையாள போராட்டம் தானே. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த மனு குறித்து அரசு தரப்பில் இன்று மாலைக்குள் தகவல் தெரிவிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மாலை மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அரசு தரப்பி பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.