சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாக அதன் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.