அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சுக்கு செந்தில் பாலாஜி பில் கேட்டதற்குப் பின்னால் அண்ணாமலை சந்திரமுகியாகவே மாறிப்போனார். செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்ற பிறகு வேறு பக்கம் கவனத்தைத் திருப்பிய அண்ணாமலை, இப்போது மீண்டும் செந்தில் பாலாஜியை சீண்ட ஆரம்பித்திருக்கிறார். பதிலுக்கு பாலாஜியும் பதிலடி கொடுத்து வருகிறார்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்த சமயத்தில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. ஆனால், சிறைக்குள் இருந்தாலும் வேட்பாளர் தேர்வு உட்பட அனைத்தையும் ரிமோட் கன்ட்ரோலில் சாதித்து அண்ணாமலைக்கு செக் வைத்தார் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும், ‘ஆக்டீவ்’ அரசியலுக்கு லீவுவிட்டு அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் அண்ணாமலை. அந்த சமயத்தில் ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி மீண்டும் ‘ஆக்டீவ்’ அரசியலுக்குள் வந்தார்.