கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜாமீன் என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு என்பது இந்திய நீதித்துறையின் முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். புகழ்பெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றோரால் இந்தக் கொள்கை வலுவாக நிலைநிறுத்தப்பட்டது. விசாரணைக் கைதிகளை நீண்ட காலம் சிறையில் வைப்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கூட, விசாரணை தாமதமானால் ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது.
கடுமையான குற்ற வழக்குகளிலும், ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் இருந்தால் தாராளமாக ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றங்களுக்கும், கீழமை நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அந்த அடிப்படைக் கொள்கை சமீப காலமாக மறக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தக் கொள்கையை வலியுறுத்தினாலும், சமீப காலமாக அவை செயல்படுத்தப்படவில்லை. கடந்த 2024ம் ஆண்டில், மணீஷ் சிசோடியா, பிரபிர் புர்கயஸ்தா மற்றும் கவிதா போன்றோரின் வழக்குகளில் ஜாமீன் வழங்கியதன் மூலம், இந்தக் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்த முயன்றோம். எனது இந்த நடவடிக்கைகள், உயர் நீதிமன்றங்களும், கீழமை நீதிமன்றங்களும் பின்பற்ற ஒரு வழிகாட்டுதலாக அமையும் என நம்புகிறேன். அதேநேரம் நீதித்துறை செயல்பாடு வரம்பு மீறுதலாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
The post ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு; அடிப்படை கொள்கை மறக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை appeared first on Dinakaran.