ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. அங்கு நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இண்டியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளில், நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு ஒருவாரம் கழித்து நவம்பர் 20-ம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதன் வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்தது. என்றாலும், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிலைமை சீராகும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து நிதானம் காத்து வந்தது.