செல்லுலாய்ட் தொடங்கி டிஜிட்டல் வரை தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட் படங்களுக்கு பஞ்சமே இருக்காது. அவ்வப்போது அப்பாவை மையப்படுத்தி வரும் படங்களும் தலைக்காட்டும். சினிமாவில் வரும் பெரும்பாலான காட்சிகள் நிஜ வாழ்க்கையில் பொருந்திப் போவதில்லை என்றாலும் குடும்பம் சார்ந்து வரக்கூடிய காட்சிகளும் வசனங்களும் பெரும்பாலும் பொருந்தக் கூடியதாக இருக்கும். எனவேதான் அதுபோன்ற சினிமாக்களைப் பார்க்கும்போது ரசிகர்கள் தங்களை எளிதாக அதில் கனெக்ட் செய்து கொள்கின்றனர். உறவுகள் சார்ந்து வரும் அத்தகைய கதாப்பாத்திரங்களில் வரும் நடிகர்களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து விடுகின்றனர்.
அந்த வகையில் 'தவமாய் தவமிருந்து' ராஜ்கிரண், '7ஜி ரெயின்போ காலனி' விஜயன், 'கனா' சத்யராஜ், 'சந்தோஷ் சுப்ரமணியம்' பிரகாஷ் ராஜ், 'யாரடி நீ மோகினி' ரகுவரன், 'பிசாசு' ராதாரவி, 'வேலையில்லா பட்டதாரி' சமுத்திரக்கனி என அப்பா கதாப்பாத்திரங்கள் பேசப்பட்ட திரைப்படங்கள் ஏராளம். இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருக்கும் படம்தான் 'டிராகன்'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறார்.