சென்னை: நம் நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலக்கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.