சென்னை: ஜிபிஎஸ் நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் ஜிபிஎஸ் நோய் (கில்லன் பாரே சிண்ட்ரோம்) பல்வேறு மாநிலத்தில் பரவி வருகிறது. இதனை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜிபிஎஸ் நோய் என்பது உடலின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வகையான நோய். நரம்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தி வாதத்தை ஏற்படுத்தும்.
கை, கால்களில் வாதம் ஏற்பட்டுச் செயலிழந்துவிடும். சுவாசிப்பதற்கு உதவும் நெஞ்சுப் பகுதித் தசைகளும் செயலிழந்து சுவாசச் செயலிழப்பு ஏற்பட்டு மரணமும் ஏற்படலாம். பொதுவாக இந்த நோய் அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும், குறிப்பாக பெரியவர்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகமாக பரவும். இந்த நோய் பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்ட சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக மக்களிடையே தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நோய் குறித்தான அறிகுறி யாருக்காவது இருந்தால் சுகாதாரப் பணியாளர்கள் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
The post ஜிபிஎஸ் நோய் குறித்து விழிப்புணர்வு: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.