சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் குறையும் என எதிர்பார்த்த நேரத்தில் திடீரென வெயில் அதிகரித்து இருப்பது மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. ஆனாலும், கடந்த சில நாட்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வானிலை அடியோடு மாறி இருக்கிறது. மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.கோடை காலத்தில்கூட இந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இல்லாத நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொளுத்துகிறது.
இடையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கிறது. குறிப்பாக, சென்னையில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. பகலில் உஷ்ணத்தால் அசவுகரியத்தை உணர முடிந்தது. நேற்று அதற்கு ஒரு இடைவெளி கொடுக்கும் வகையில் இரவில் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிலும், இடி, மின்னல், காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலால் சென்னை தகித்துவந்த நிலையில், நேற்று இரவில் பெய்த மழையால் ஜில்லென வானிலை மாறிப்போனது. இதமான சூழலை மழை ஏற்படுத்தியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அண்டை மாவட்டங்களிலும் இன்று காலை முதலே ஜில்லென்ற வானிலை காணப்படுகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் லேசான தூறல் போட்டு பூமியும் குளிர்ந்துள்ளது. இந்நிலையில், மக்கள் மனதை குளிர்விக்கும் வகையில் வரும் 28ம்தேதி தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது, தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 28ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. மேலும், மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வடக்கு ஆந்திர கடலோ பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
The post ஜில்லென்று மாறிய சென்னை வானிலை; தமிழகத்தில் வரும் 28ம்தேதி வரை மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.