இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டுள்ள 3 நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.
தனது 2-வது சதத்தை விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 101 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 123 ரன்களும், தீப்தி சர்மா 84 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்களும் விளாசினர். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 28, பிரதிகா ராவல் 1, ரிச்சா கோஷ் 20, அமன்ஜோத் கவுர் 5, ஸ்ரீ சாரனி 6, ஸ்னே ரானா 1 ரன் சேர்த்தனர்.