புதுக்கோட்டை: ஜெயக்குமாரை வைத்து கருத்துக்களை மட்டும் கூற வைத்து வரும் எடப்பாடி பாஜவோடு மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தஞ்சாவூர் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை உள்ள காரணத்தால் தான் மாணவிகள் தைரியமாக பாலியல் புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.
இந்த அரசு பெண்களுக்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் வழங்கி உள்ளது. அண்ணாமலைக்கு ஒருமை பன்மை எதுவும் கிடையாது. ஐபிஎஸ் எப்படி படித்தார் என்பது அவருக்குத்தான் தெரியும். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு மொழி கொள்கை வைத்து கொண்டு முன்னேறி வருகிறார்கள். நாம் இருமொழி கொள்கையை வைத்துக்கொண்டு ஏன் நம்மால் முன்னேற முடியாது. மோடியே வெளிநாட்டிற்கு சென்றால் இந்தியிலா பேசுகிறார், ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். அதனால் திமுக இருமொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளது.
நிச்சயமாக எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை அசைக்க முடியாது. கூட்டணி பலம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் அந்த கூட்டணி பாஜவுக்கு கிடைக்கவில்லை. அந்த ஆதங்கம் தான். பாஜவோடு மறைமுக கூட்டணி வைத்து உள்ளவர்தான் எடப்பாடி பழனிசாமி. பாஜ ஆட்சியை, அவர் மறைமுகமாக ஆதரித்து அவர்களது உதவியை நாடி வருகிறார். இதுவரை பாஜ ஆட்சி குறித்து எடப்பாடி விமர்சித்தது இல்லை என்பதுதான் உண்மை. ஜெயக்குமார் போன்றவர்களை வைத்து கருத்து மட்டும் கூற வைத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜெயக்குமாரை வைத்து கருத்து கூற வைக்கிறார்; எடப்பாடி பழனிசாமிக்கு பாஜவுடன் மறைமுக கூட்டணி: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.