புராணக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை என பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இதில் பெரும்பாலான பக்திப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்த வரிசையில் கொஞ்சம் லேட்டாக உருவான பக்தி படம், ‘சக்தி லீலை’.
டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். பொதுவாக, பக்தி படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் இருக்கும். இதிலும் அப்படித்தான். ஜெயலலிதா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, கே.பி. சுந்தராம்பாள், உஷாராணி, உஷாநந்தினி, ஜெமினி கணேசன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, அசோகன், மனோரமா, வி.கே.ராமசாமி என பலர் நடித்தனர். இவ்வளவு முன்னணி நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தது, ‘சக்தி லீலை’யாகத்தான் இருக்கும். இதில் ஜெமினி கணேசன் சிவபெருமானாகவும் ஜெயலலிதா பெரிய பாளையத்து அம்மனாகவும் நடித்திருந்தனர். சிவகுமார், நாரதராக நடித்தார்.